இணைய மோசடிகளில் இருந்து பயனர்களை பாதுகாக்க கூகுள் குரோம் பிரவுசரில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயனர்கள் சந்தேகத்திற்கிடமான வலைதளங்களுக்குச் செல்வதற்கு முன்பே எச்சரிக்கை செய்யும் புதிய அப்டேட்டை கூகுள் வெளியிட்டுள்ளது. மேலும், போலி ஆன்டிவைரஸ் மற்றும் போலி பிரவுசர் அப்டேட் செய்திகளைத் துல்லியமாகக் கண்டறிய ஜெமினி ஏஐ தொழில்நுட்பத்தையும் கூகுள் இதில் இணைத்துள்ளது.
எச்சரிக்கை முறைகள் என்னென்ன? கூகுள் குரோமின் ‘சேஃப் பிரவுசிங்’ (Safe Browsing) பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம், ஃபிஷிங் அல்லது மல்வேர் தாக்குதல்கள் உள்ள வலைதளங்களை குரோம் கண்டறிந்து எச்சரிக்கும்.
சந்தேகத்திற்கிடமான எச்சரிக்கை (Suspicious Warning): ஆபத்து சற்று குறைவாக உள்ள ஆனால் சந்தேகம் தரும் தளங்களுக்கு இந்த பாப்-அப் (Pop-up) எச்சரிக்கை விடுக்கப்படும். பயனர்கள் பின்னோக்கிச் செல்லலாம் அல்லது இது தவறுதலாகக் குறிக்கப்பட்டதாக நினைத்தால் பாதுகாப்பானது எனவும் தேர்வு செய்யலாம்.
ஆபத்தான எச்சரிக்கை (Dangerous Warning): முழுமையான ஆபத்து உறுதி செய்யப்பட்ட தளங்களுக்கு ஏற்கெனவே உள்ள முழுப்பக்க சிவப்பு நிற எச்சரிக்கை தொடர்ந்து காட்டப்படும்.
ஜெமினி ஏஐ மூலம் மோசடி கண்டறிதல்: வலைதளங்களின் உள்ளடக்கங்களை அலசி ஆராய்ந்து மோசடிகளைக் கண்டறிய சர்வர் அளவிலான ஜெமினி ஏஐ மாடலை கூகுள் பயன்படுத்தி வருகிறது. போலி பிரவுசர் அப்டேட்டுகள் மற்றும் ஆன்டிவைரஸ் எச்சரிக்கைகள் போன்ற மோசடிகளை இது விரைவாகக் கண்டறியும். வலுவான மோசடி குறிகளுள்ள பக்கங்களின் வாசகங்கள் மட்டுமே தற்காலிகமாகப் பகுப்பாய்வு செய்யப்படும் என்றும், அவை சேமிக்கப்படவோ அல்லது ஏஐ பயிற்சிக்குப் பயன்படுத்தப்படவோ செய்யாது என்றும் கூகுள் உறுதியளித்துள்ளது.
என்ஹான்ஸ்டு பிரொட்டெக்ஷன் (Enhanced Protection) இயக்குவது எப்படி? இந்த புதிய பாதுகாப்பு அம்சங்களைப் பெற பயனர்கள் ‘Enhanced Protection’ மோடை ஆன் செய்ய வேண்டும். குரோம் பிரவுசரைத் திறந்து Settings செல்லவும். அதில் Privacy and Security என்பதைத் தேர்ந்தெடுத்து Security பகுதிக்குச் செல்லவும். அங்கு Safe Browsing என்பதில் Enhanced Protection என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
வழக்கமான பாதுகாப்பை விட இந்த முறை பல மடங்கு கூடுதலான பாதுகாப்பை வழங்கும் என்றாலும், பயனர்கள் அறிமுகமில்லாத சந்தேகத்திற்கிடமான லிங்க்குகளைத் தவிர்ப்பது நல்லது.



