நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் திரைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரன்பீர் கபூர் ராமராகவும், ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ் இராவணனாகவும் நடித்துள்ள இத்திரைப்படத்தின் முன்பதிவு முதல் நாளிலேயே 80,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
Sacnilk தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள 3,537 காட்சிகளுக்கான முன்பதிவு மூலம் ‘ராமாயணா’ படம் முதல் நாளிலேயே ரூ.4.88 கோடி வசூலித்துள்ளது. மொத்தம் 84,969 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ள நிலையில், டெல்லி/என்.சி.ஆர் பகுதியில் 18,674 டிக்கெட்டுகள் விற்பனையாகி ரூ.1.42 கோடியும், மும்பையில் 14,823 டிக்கெட்டுகள் விற்பனையாகி ரூ.1.01 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், புனே, பெங்களூரு, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் டிக்கெட் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற படத்தின் பிரீ-ரிலீஸ் விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரன்பீர் கபூர், ராமராக நடிப்பது குறித்து பேசுகையில், “ராமாயணம் என்பது வெறுமனே கூறப்படும் கதையல்ல, அது நமக்குள்ளேயே வாழும் உணர்வு. பலம், தைரியம், கருணை மற்றும் கடமையின் உண்மையான அர்த்தத்தை அது நமக்கு நினைவூட்டுகிறது. சிறந்த மகனாக, தந்தையாக, சகோதரனாக மற்றும் நண்பனாக வாழ இது கற்றுக்கொடுக்கிறது” என உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.
இப்படத்தில் சாய் பல்லவி சீதையாக நடிக்க, அருண் கோவில், சன்னி தியோல், லாரா தத்தா, ராகுல் பிரீத் சிங், விவேக் ஓபராய் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் இரண்டாம் பாகம் (Ramayana: Part 2) 2027 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



