செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வீரா (எ) வீர முத்துகிருஷ்ணன் (26). பாஸ்ட் புட் கடை நடத்தி வந்த இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கபெருமாள் கோவில் அருகே ஆகாஷ் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து ஏரிக்கரையில் புதைத்த வழக்கில் இவர் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், நீதிமன்ற வழக்கு தொடர்பாக இன்று ஆஜராகி கையெழுத்திட்ட வீர முத்துகிருஷ்ணன், பின்னர் தனது நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். செங்கல்பட்டு பைபாஸ், பழவேலி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வாகனத்திற்குப் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் சுற்றி வளைத்தது.
சற்றும் எதிர்பாராத வேளையில், கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் வீர முத்துகிருஷ்ணனை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆகாஷ் கொலையில் பழிதீர்க்கும் நோக்கில், நீதிமன்ற வளாகத்தில் இருந்தே திட்டமிட்டுப் பின்தொடர்ந்து வந்து இக்கொலையை அரங்கேற்றியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் போது அவருடன் இருந்த இருவரைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய 6 பேர் கொண்ட கொலையாளி கும்பலை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
Read More : விஜய் – த்ரிஷா நட்பு பற்றி அம்பிகா சொன்ன அந்த ஒரு விஷயம்.. வைரலாகும் கருத்து!



