2026-ல் மீண்டும் ஆட்சியமைக்க ஓய்வின்றி களப்பணியாற்ற வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்; சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி பிரச்சனைகளை களையவும், மக்கள் குறைகளை தீர்க்கவும் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின், ‘தாயுமானவர் திட்டம்’ ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறோம். நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கு அதிகரித்துள்ளது. நாள்தோறும் கட்சி நிர்வாகிகள் மக்களை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
தற்போது பாஜக அரசு தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் என்னென்ன அட்டூழியங்களை பிஹாரில் மேற்கொண்டு வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு கடந்த ஆண்டுகளில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, அங்குள்ள முதலீட்டாளர்களுடன் பேசியதன் விளைவாக தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் கொண்டுவரப்பட்டு, பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை தொடங்கி உள்ளன.
அதன் காரணமாக சுமார் 30 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெருகி உள்ளது. மத்திய அரசு வெளியிட்ட தகவல்படி இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழகம்தான். வரும் செப்டம்பர் மாதம் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வர உள்ளேன்.
வரும் நாட்களில் திமுக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், தமிழகத்தின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும் என்பதை உறுதியாக சொல்லி கொள்கிறேன். நானும் ஓய்வெடுக்க போவதில்லை. உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை. மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது முழு வீச்சுடன் பணியாற்றிடுவோம் என தெரிவித்துள்ளார்.



