மும்பை – எக்ஸ்பிரஸ்வேயில் பிரேக் செயலிழந்த காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிரக் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து புனே வரையிலான எக்ஸ்பிரஸ்வேயில் , ராய்காட் மாவட்டத்தின் கோபோலி என்ற இடத்தில் டிரக் ஒன்று வந்து கொண்டு இருந்தது. திடீரென பிரேக் செயலிழந்ததால் டிரக் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த சொகுசு கார்கள் உள்ளிட்ட 20 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதனால் வாகனங்கள் சேதமடைந்து சாலையில் ஆங்காங்க சிதறிக்கிடந்தன.
இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 17-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிரக் டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவரை மருத்துவ பரிசோதனை செய்ததில், மது ஏதும் அருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதிய விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மும்பை – புனே நெடுஞ்சாலையில் விபத்து காரணமாக சுமார் 5 கி.மீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்று நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்களை மாற்று பாதையில் போலீசார் திருப்பி விட்டனர். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் மற்ற 21 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Read More: தாய்லாந்தும் கம்போடியாவும் ஏன் சண்டையிடுகின்றன? 11 ஆம் நூற்றாண்டின் சிவன் கோயில் தான் காரணமா?