ஈரானுக்கு நிதி உதவி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு நிதி அல்லது தளவாட உதவிகளை வழங்கும் நாடுகள் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். ஈரான் மீதான தற்போதைய ராணுவ நடவடிக்கை, வரலாற்றிலேயே எந்தவொரு நாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கை என்று அவர் வர்ணித்துள்ளார்.
தான் தவிர வேறு யாரும் ஈரானுக்கு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு வழங்கவில்லை என்று குறிப்பிட்ட டிரம்ப், ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ஒட்டுமொத்த ராணுவமும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த நாடு தற்போது ஒரு நூலிழையில்தான் தொங்கிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
எண்ணெய் கடத்தல், பணப் பரிமாற்றங்கள், கப்பல் பதிவுகள் மற்றும் பினாமி நிறுவனங்கள் போன்ற அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் தனது ‘ட்ருத் சோஷியல்’ பதிவில் கடுமையாகக் எச்சரித்துள்ளார். ஈரானின் அச்சுறுத்தலை தனிமைப்படுத்தி தோற்கடிக்க தங்களது அனைத்துக் கூட்டாளிகளும் அமெரிக்காவுடன் நிற்க வேண்டும் என்றும், இது ஒரு பொருளாதார ‘டி-டே’ (ECONOMIC D-DAY) போல அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரி 28 முதல் மோதலில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், ஈரானுக்கு எதிரான கடற்படை முற்றுகை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக இடையூறுகள் இருந்தபோதிலும் உலகளாவிய எண்ணெய் விலைகள் பெரிதும் ஸ்திரமாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறந்தால் அதன் மீதான நடவடிக்கைகளைக் கைவிடுவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ள நிலையில், டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மறுபுறம், அமெரிக்காவுடன் நீண்ட கால மோதலுக்குத் தயாராகி வருவதாகவும், டிரம்ப்பின் பதவிக்காலம் 2028-ல் முடியும் வரை இதனை நீடிக்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.



