ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் புதன்கிழமை அதிகாலை 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள், பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் பரவலாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவசர எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் தற்போது சுனாமி தாக்கத்தின் முதல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், கடற்கரையோர கட்டிடங்கள் தண்ணீரில் மூழ்கும் காட்சிகள், மண்ணும், வழித்தடங்களும் பெருமளவில் வெள்ளத்தில் மூழ்குவது போன்ற திகிலூட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
ரஷ்யா: நிலநடுக்கம் கம்சட்காவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து கிழக்கு-தென்கிழக்கில் 125 கி.மீ தொலைவில், சுமார் 19 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. கம்சட்கா மற்றும் செவெரோ-குரில்ஸ்க் பகுதிகளில் மக்கள் பாதுகாப்புக்காக வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளன. ரஷ்யா அவசர சேவை துறைகள், மக்கள் வெளியேற்ற நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.
ஜப்பான்: ஜப்பானில் ஹொக்கைடோ அருகே 30 சென்டிமீட்டர் உயரமுள்ள சுனாமி அலை கடலோரத்தில் பதிவாகியுள்ளது. ஜப்பான் வானிலை நிறுவனம், மீண்டும் பெரிய அலைகள் தாக்கக்கூடும் என்றும், ஹொக்கைடோ, ஒசாகா, வகயாமா உள்ளிட்ட பகுதிகளில் 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது. கடலோர நகரங்களில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா: ஹவாய், அலாஸ்கா, குவாம் மற்றும் மைக்ரோனேசியா தீவுகளில் சுனாமி கண்காணிப்பு அமலில் உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் கணக்கில், “பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது. ஜப்பானும் பாதிக்கப்படலாம். sunami.gov தளத்தில் தகவல்களைப் பார்க்கவும். பாதுகாப்பாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.