தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது..
இந்த சூழலில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று கூறி ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது.. முதலில் தேசிய கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில் பின்னர் டிடிவி தினகரனும் வெளியேறினார். தனது முடிவை மறு பரிசீலனை செய்ய தினகரனிடம் வலுயுறுத்துவேன் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்தார்..
இந்த நிலையில் சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரனை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.. சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் நேற்றிரவு சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என அண்ணாமலை தினகரனிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கூட்டணியில் இருந்து வெளியேற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான் காரணம் என டிடிவி தினகரன் கூறியிருந்தார்.. மேலும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.. இந்த நிலையில், அண்ணாமலை – டிடிவி சந்திப்பு அரசியல் அரங்கில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது…
எனினும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பான பேச்சுவார்த்தை என்றால் அது தமிழக பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் தான் பேசியிருக்க வேண்டும்.. ஆனால் அண்ணாமலை சந்தித்து பேசியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.. எனவே இது அமமுகவை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையா அல்லது வேறு ஏதேனும் திட்டங்கள் உள்ளதா என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும்..