பஹல்காம் பயங்கரவாதிகளின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து கேள்வி எழுப்பிய ப.சிதம்பரத்தை அமித்ஷா கடுமையாக சாடினார்.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பதிலடி கொடுத்துள்ளார்.. இன்று மக்களவையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய அவர், அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததற்கான உறுதியான ஆதாரம் அரசாங்கத்திடம் உள்ளது என்று கூறினார்.
மேலும் “எங்களிடம் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்கள் உள்ளன. பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை” என தெரிவித்தார்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது, தாக்குதல் நடத்தியவர்களின் தோற்றம் குறித்து சந்தேகம் எழுப்புவதன் மூலம் சிதம்பரம் பாகிஸ்தானைப் பாதுகாப்பதாக அமித் ஷா குற்றம் சாட்டினார். மேலும் “நேற்று அவர்கள் (காங்கிரஸ்) பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள், அதற்கு யார் பொறுப்பு என்று எங்களிடம் கேட்டார்கள். நிச்சயமாக, நாங்கள் ஆட்சியில் இருப்பதால் அது எங்கள் பொறுப்பு. பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன? என்று சிதம்பரம் ஜி கேள்வி எழுப்பினார்..
பாகிஸ்தானைக் காப்பாற்றுவதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கும் என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர் இதைச் சொல்லும்போது, அவர்கள் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார்கள் என்று அர்த்தம்,” என்று அவர் கூறினார்.
மேலும், “இந்த நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர், முழு உலகத்தின் முன்னிலையிலும் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார்” என்று அமித்ஷா கூறினார்.