மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த நவிமும்பை, ஐரோலி பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான பலிராம் சூர்யநாத் குஷ்வாகா. இவருக்கு 40 வயதான சுனிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சுனிதாவுக்கும் 30 வயதான ராகுல் தசரத் பிரஜாபதி என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதளாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இவர்களின் கள்ளத்தொடர்பு குறித்து சுனிதாவின் கணவருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சுனிதாவை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் சுனிதா தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து வந்துள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தங்களின் கள்ளக்காதலுக்கு பலிராம் இடையுறாக இருப்பதால், அவரை கொலை செய்ய சுனிதாவும் அவரது கள்ளக்காதலன் ராகுலும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி இரவு, தனது இரண்டு குழந்தைகளையும் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சுனிதா அனுப்பி உள்ளார்.
பின்னர் கணவர் பலிராம் தூங்கும் போது, கள்ளக்காதலன் ராகுலும் சுனிதாவும் சேர்ந்து பலிராமின் கழுத்தை நெரித்துள்ளனர். இதில் பலிராம் மயங்கிய நிலையில், கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இதில் பலிராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அது மட்டும் இல்லாமல், கொலையை மறைக்க, பலிராமின் உடலை சுனிதாவும் ராகுலும் சேர்ந்து மூன்று துண்டுகளாக வெட்டியுள்ளனர். பின்னர் வெட்டிய 3 பாகங்களை சாக்கு மூட்டைகளில் கட்டி, ராகுலின் ஆட்டோவில் ஏற்றிச் சென்று Gawli Dev மலை காட்டுப் பகுதியில் வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளனர்.
பின்னர், தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, சுனிதா தான் வசித்து வந்த சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, குழந்தைகளுடன் கன்சோலி பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். இந்நிலையில், பலிராமின் சகோதரர் கடந்த ஏப்ரல் மாதம் சுனிதாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் பலிராம் குறித்து கேட்டதற்கு சுனிதா முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பலிராமின் சகோதரர் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சுனிதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சுனிதா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் காட்டுப் பகுதியில் வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, காட்டுப் பகுதியில் இருந்து பலிராமின் எலும்புக்கூடு பாகங்களை மீட்ட போலீசார், சுனிதா மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். கொலை நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: பெற்றோர்களே கவனம்! மிக்சர் சாப்பிட்ட 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு..



