Waterfalls | தமிழ்நாட்டின் டாப் 10 நீர்வீழ்ச்சிகள்..! சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடம்..!! முழு லிஸ்ட் இதோ..!

Water Falls 2026

Waterfalls | அன்றாட இயந்திர வாழ்க்கையின் பரபரப்பு, வேலை பளு மற்றும் மன சோர்வில் இருந்து விடுபட இயற்கை நமக்கு அளித்த சிறந்த வரப்பிரசாதம் அருவிக் குளியல் ஆகும். ஆர்ப்பரித்து கொட்டும் குளிர்ந்த நீரில் நீராடுவது உடலுக்கும் மனதிற்கும் உடனடி புத்துணர்ச்சியை வழங்கும். இயற்கை எழிலும், மூலிகை குணங்களும் நிறைந்த தமிழ்நாட்டின் டாப் 10 நீர்வீழ்ச்சிகள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள்:


ஆகாய கங்கை அருவி (நாமக்கல்):

கொல்லிமலையில் அய்யாறு என்ற நதி 300 அடி உயரத்தில் இருந்து செங்குத்தாக விழுவதுதான் ஆகாய கங்கை அருவி. ஆகாயத்தில் இருந்து கங்கை நதி பாய்வது போன்ற தோற்றம் தரும் இவ்வருவிக்கு செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அருகில் அரப்பளீஸ்வரர் கோவில் மற்றும் கோரக்கர், கலாங்கி நாதர் குகைகள் உள்ளன. நவம்பர் முதல் ஜனவரி வரை செல்ல உகந்த காலமாகும்.

கும்பக்கரை அருவி (தேனி):

பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலைகளில் இருந்து உருவாகும் பாம்பாறு அடிவாரத்தில் கும்பக்கரையாக விழுகிறது. மலையேற்றத்திற்கு சிறந்த இடமான இங்கு வழுக்குப்பாறை, யானை கஜம் போன்ற இயற்கை அமைப்புகள் உள்ளன. ஆபத்தான ஆழமான பகுதிகள் உள்ளதால் கவனமுடன் குளிக்க வேண்டும். அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு செல்லலாம்.

குரங்கு அருவி (கோவை):

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் ஆழியார் அணை அருகே 60 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. அருவிக்கு மேலே வால்பாறை, கீழே ஆழியார் அணை என சிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. குரங்குகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் கூடுதல் கவனம் தேவை. காலை 9 முதல் மாலை 5 வரை அனுமதிக்கப்படும் இங்கு அக்டோபர் முதல் மார்ச் வரை செல்லலாம்.

கேத்தரின் அருவி (நீலகிரி):

குன்னூர் அருகே பசுமையான தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் 250 அடி உயரத்தில் விழும் அழகிய நீர்வீழ்ச்சி. நீலகிரியின் இரண்டாவது பெரிய நீர்வீழ்ச்சியான இதனை டால்பின் நோஸ் பகுதியில் இருந்து பார்ப்பது கண்கொள்ளா காட்சியாகும். புகைப்படம் எடுக்கவும் மலையேற்றத்திற்கும் ஏற்ற இடமான இங்கு செல்ல அக்டோபர் முதல் மே வரை சிறந்த காலமாகும்.

ஒகேனக்கல் அருவி (தர்மபுரி):

இந்தியாவின் நயாகரா என்று புகழப்படும் ஒகேனக்கல் அருவி, காவிரி ஆற்றில் அமைந்துள்ள பல அருவிகளின் தொகுப்பாகும். கார்பனேட் பாறைகள் நிறைந்த இந்த இடத்தில் ஆற்றில் நீர் குறையும் போது பரிசல் பயணம் செய்வது பிரபலம். பாதுகாப்பு விதிகளை பின்பற்றி குளிக்க வேண்டிய இங்கு அக்டோபர் முதல் மார்ச் வரை செல்லலாம்.

சுருளி அருவி (தேனி):

கம்பம் அருகே மேகமலையில் இருந்து உற்பத்தியாகி 40 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடத்தும் சாரல் திருவிழா இங்கு மிகவும் பிரபலம். சுருளி வேலப்பர் கோவில், கோடி லிங்க கோவில் மற்றும் குகைகள் நிறைந்த இந்த அருவிக்கு ஜூன் முதல் அக்டோபர் வரை செல்வது சிறந்தது.

குற்றாலம் அருவி (தென்காசி):

தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட ஒன்பது அருவிகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் மூலிகைகளை தழுவி வரும் நீரில் குளிப்பது மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான சீசன் காலம் இங்கு செல்ல மிகவும் ஏற்றது.

கிளியூர் அருவி (சேலம்):

ஏற்காடு சேர்வராயன் மலையில் ஏற்காடு ஏரி நிரம்பி வழியும் போது 300 அடி உயரத்தில் இருந்து கிளியூர் பள்ளத்தாக்கில் அருவியாக விழுகிறது. மலையேற்ற பிரியர்களுக்கு மிகவும் பிடித்த இந்த இடத்திற்கு அக்டோபர் மாதத்திற்கு பிறகு நீர்வரத்து இருக்கும் காலத்தில் செல்லலாம்.

குட்லாடம்பட்டி அருவி (மதுரை):

வாடிப்பட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 89 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. அமைதியான சூழல் கொண்ட இங்கு தியானம் செய்ய ரமணகிரி ஆசிரமம் உள்ளது. மழைக்காலத்தை தொடர்ந்து செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு நீர்வரத்து சிறப்பாக இருக்கும்

திருப்பறப்பு அருவி (கன்னியாகுமரி):

குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் இவ்வருவி 50 அடி உயரத்தில் இருந்து விழுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக பாதுகாப்பாக குளிக்கக்கூடிய அமைப்பை கொண்டுள்ளது. படகு சவாரி வசதி மற்றும் அருகில் வரலாற்று சிறப்புமிக்க மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. அக்டோபர் முதல் மார்ச் வரை செல்லலாம்.

    Read More : ஐய்யோ.. அம்மா.. வலி தாங்க முடியலையே..! உடலில் தீவைத்துக் கொண்ட 6ம் வகுப்பு மாணவன்..! தஞ்சையில் பேரதிர்ச்சி..!

    Next Post

    கடல் அலை போல காட்சியளிக்கும் மேகக் கூட்டங்கள்..! ஒரே நாளில் சென்று வர சூப்பர் ஸ்பாட்..! மிஸ் பண்ணிடாதீங்க..!

    Sun Sep 6 , 2026
    தற்கால அவசர மற்றும் இயந்திர வாழ்க்கையில், குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த அழுத்தத்தில் இருந்து விடுபடவும், வார இறுதி விடுமுறை நாட்களை புத்துணர்ச்சியுடன் கழிக்கவும் பலரும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு மலையேற்றம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் மலையேற்ற பிரியர்களின் விருப்ப பட்டியலில் முதலிடம் பிடித்து […]
    Kodaikanal 2026

    You May Like