ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல எனத் திருவாரூய் பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியது பேசுபொருளாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
அதே போல், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ’’மக்களை சந்திப்போம் தமிழகத்தை மீட்போம்’’ என்ற பெயரில் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ” ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்னும் ஏமாளி அல்ல. கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, தனித்து ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இது அமித்ஷாவுக்கான மறைமுக பதில் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து பேசிய அவர் அதிமுகவின் முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை விவரித்து, மக்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாகக் கூறினார். அதிமுக ஆட்சியில் மருத்துவத் துறையில் 11 மருத்துவக் கல்லூரிகள், 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும் காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, அத்திக்கடவு-அவினாசி திட்டம், 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இட ஒதுக்கீடு, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை தமது ஆட்சியின் முக்கிய சாதனைகளை பெருமையாக கூறினார்.
Read more: சிக்கன் விலை திடீர் சரிவு.. முட்டை விலையில் மாற்றமா..? இன்றைய விலை நிலவரம் இதோ..!