தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளன. குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைக் குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளன.
குடும்பத் தலைவிகளுக்காக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் எனவும், ஆண்டுக்கு 6 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் எனவும் தவெக அறிவித்துள்ளது. பெண்களின் நலனுக்காக அரசு பேருந்துகளில் இலவச பயணம், திருமண உதவியாக 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் திட்டமும் இடம்பெற்றுள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டு பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. 100 காமராஜர் தர குடியிருப்பு பள்ளிகள் அமைக்கப்படும் எனவும், ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், 5 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும், ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் வாக்குறுதிகள் உள்ளன. போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு உருவாக்கப்படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்காக ரூ.15,000 ஆண்டு உதவித்தொகை, பயிர்க்கடன் தள்ளுபடி, 100 சதவீத பயிர் காப்பீடு, 5 லட்சம் சோலார் பம்புகள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.27,000 வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முதியோர், கைம்பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்லா வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வாக்குறுதிகளில் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில், மாவட்ட வாரியாக தனித்திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும், ஊழலற்ற வெளிப்படையான ஆட்சி வழங்கப்படும் எனவும் தவெக வாக்குறுதி அளித்துள்ளது.



