ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் வாக்கு எண்ணிக்கையைப் பார்த்த வேட்பாளர்களுக்கே அதிர்ச்சி காத்திருந்தது. பாஜக வேட்பாளர் ஒருவருக்கு வெறும் ஒரு வாக்கு மட்டுமே கிடைத்த நிலையில், மற்றொரு வேட்பாளருக்கு ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. இதில், தனது வாக்கும் குடும்பத்தினரின் வாக்குகளும் கூட காணவில்லை என ஒரு வேட்பாளர் புகார் அளிக்க முடிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் 309 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட 10,245 கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 9 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான முடிவுகள் செப்டம்பர் 14-ம் தேதி வெளியான நிலையில், சில வார்டுகளில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டித்வானா-குசமான் மாவட்டம் பர்பத்சர் நகராட்சியின் 13-வது வார்டில் பாஜக சார்பில் கைலாஷ் சந்த் போட்டியிட்டார். தேர்தல் முடிவில் அவருக்கு கிடைத்தது வெறும் ஒரு வாக்கு மட்டுமே. அதே வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஹினா கானம் 376 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
பர்பத்சர் நகராட்சியில் மொத்தம் 25 வார்டுகள் உள்ள நிலையில், அதில் 13 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. இதற்கிடையே, தனக்கு ஒரு வாக்கு மட்டுமே கிடைத்தது குறித்து கைலாஷ் சந்த் விளக்கம் அளித்துள்ளார்.
தான் 12-வது வார்டைச் சேர்ந்தவர் என்றும், தனது வாக்கு அந்த வார்டில்தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையின் வேட்பாளர் தேர்வு காரணமாக தான் வேறு வார்டில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதுவே தனது குறைந்த வாக்கு எண்ணிக்கைக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், நாகௌர் மாவட்டம் ரியான்பாரி நகராட்சியின் 15-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மஜீத் முகம்மதுவுக்கும் ஒரு வாக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இந்த வார்டில் பாஜக வேட்பாளர் சுனில் குமார் சவுகான் வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, சிந்திரி நகராட்சியின் 3-வது வார்டில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய லோக் தளம் வேட்பாளர் ஓம் பிரகாஷுக்கு ஒரு வாக்குகூட கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது வாக்கும், குடும்ப உறுப்பினர்களின் வாக்குகளும் தேர்தல் முடிவில் இடம்பெறவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது வாக்குகளே பதிவாகாதது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஒரு வாக்கு மட்டுமே பெற்ற வேட்பாளர்கள், ஒரு வாக்குகூட பெறாத வேட்பாளர் என ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, போட்டியிட்ட வேட்பாளரின் சொந்த வாக்கும் குடும்பத்தினரின் வாக்குகளும் பதிவாகவில்லை என்ற குற்றச்சாட்டு தேர்தல் நடைமுறை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
Also Read: பண்டிகை முடிந்து வீடு திரும்பிய குடும்பம்.. பின்னால் வந்து மோதிய பால் டேங்கர்; 9 வயது சிறுமி உட்பட 3 பேர் பலி!



