சேலத்தில் நேற்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: திராவிட இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் கொள்கை ரீதியாக இணைந்தவை. சமூக நலனுக்கான கொள்கை உறுதியாக உள்ளதால், நட்பும் உறுதியுடன் உள்ளது. கருப்பு, சிகப்பு இணைந்ததே திராவிட முன்னேற்றக் கழகம். “தி.மு.கவின் பாதி கம்யூனிஸ்ட் கட்சி தான்” என்று அவர் வலியுறுத்தினார்.
சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டபோது, பெரியாரும் அண்ணாவும் கடுமையாக கண்டித்ததை நினைவு கூர்ந்தார். மேலும், சேலம் மத்திய சிறையில் சிறை தியாகிகள் நினைவாக மணிமண்டபம் அமைக்கும் பணி நாளை தொடங்கும் என்று அறிவித்தார். அதே சமயம், எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனம் செய்தார். “அடிமைத்தனம் பற்றி பேச அவருக்கு உரிமை இல்லை. தி.மு.கவை பொறுத்தவரை யாரும் யாருக்கும் அடிமை இல்லை. கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் மலிவான அரசியலே அவர் செய்து வருகிறார்” என்றார்.
கூட்டணியில் இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்ததையும், தி.மு.க அவற்றை கவனித்து பலவற்றை நிறைவேற்றியதையும் அவர் குறிப்பிட்டார். மேலும், பா.ஜ.க அரசை குறிவைத்து தேர்தல் ஆணையத்தை கிளை அமைப்பாக மாற்றிவிட்டார்கள். சதி வாக்காளர் பட்டியலிலிருந்தே தொடங்குகிறது.
அமலாக்கத் துறையை வைத்து தனக்கு ஒற்று வராத எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார்கள். ரெய்டு என்று சொன்னவுடன் வந்து கூட்டணியில் சேர்வதற்கு நாங்கள் என்ன பழனிசாமியா? எங்களை மிரட்ட நினைத்தவர்கள் எல்லாம் மிரண்டு போய் உள்ளார்கள். இதைவிட மோசமான அணுகுமுறை எல்லாம் பார்த்த இயக்கம் தான் திமுக. நெருப்பாற்றில் நீந்தியே பழக்கப்பட்டவர்கள், உங்களுடைய எண்ணம் எந்த காலத்திலும் நிறைவேறாது
தொடர்ந்து “தமிழ்நாட்டில் மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். 2021ல் போல 2026-இலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே வெற்றி பெறும். இந்தியாவிற்கு வழிகாட்டும் சாதனைகள் செய்வோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இறுதியாக, “ஜனநாயகம் வெல்லும், அதை வெற்றிபெற வைப்பது நமது கடமை. கம்யூனிஸ்டுகள் களத்தில் இறங்கினால் எந்த சதியும் வெற்றி பெறாது. அனைத்து தோழர்களுக்கும் ரெட் சல்யூட்” என்று தனது உரையை முடித்தார்.
Read more: திமுகவை வீழ்த்த NDA கூட்டணியில் பாமக, தேமுதிக இணைய வேண்டும்..!! – நடிகை கஸ்தூரி