நமக்கு தீங்கு விளைவித்தவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம், பாதிக்கப்பட்ட பலரின் மனதிலும் எழும் ஒரு இயல்பான உணர்வாகும். இருப்பினும், பிறர் செய்த தீங்கையும் அதனால் ஏற்பட்ட கோபத்தையும் மனதில் சுமந்துகொண்டே இருப்பது நமக்கு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை விளக்குவதற்கு ஒரு அழகான குட்டிக்கதை சுட்டிக்காட்டப்படுகிறது.
ஒருமுறை சீடன் ஒருவன் தனது குருவிடம் சென்று, “என்னை ஒருவர் மிகவும் காயப்படுத்திவிட்டார். அவர் செய்த தீமைக்கான கர்ம பலனை அவர் உடனடியாக அனுபவிக்க வேண்டும்; அவருக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்” என்று கோபத்துடன் கூறினான். அவனது கூற்றை அமைதியாகக் கேட்ட குரு, அருகிலிருந்த நெருப்பில் இருந்து ஒரு எரியும் கரிக்கட்டியை எடுத்துச் சீடனின் கையில் கொடுத்தார். அதை வாங்கிய சில நொடிகளிலேயே சூடு தாங்க முடியாமல் சீடன் கையை உதறி, கரிக்கட்டையைக் கீழே போட்டான்.
அப்போது குரு, “அந்த நெருப்பு உன்னைச் சுட வேண்டும் என்ற எண்ணத்தில் நீ அதைக் கையில் பிடிக்கவில்லை; ஆனால், அதை விடாமல் பிடித்து வைத்திருந்ததால் அது உன்னையே சுட்டது. அதேபோல்தான், ஒருவர் செய்த தீங்கையும், அதனால் ஏற்பட்ட கோபத்தையும் நாம் மனதில் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் போது, அந்தத் தவறு எனும் நெருப்பை நாமே சுமக்கிறோம். அது அவர்களுக்குச் சுடுகிறதோ இல்லையோ, நம்மை நிச்சயம் தொடர்ந்து எரித்துக்கொண்டே இருக்கும்” என்று விளக்கினார்.
பிறர் செய்த தவறுகளுக்கான கர்ம பலன்கள் அவர்களை நிச்சயம் சென்றடையும்; அதை நினைத்துக்கொண்டு நம் மன அமைதியை இழக்கக் கூடாது என்பதே இதன் சாரம்சமாகும். பிறரை மன்னித்து, கடந்த கால நிகழ்வுகளை அப்படியே கடந்து செல்வது அவர்கள் நன்மைக்காக மட்டுமல்ல, நமது சொந்த மன அமைதிக்காகவும்தான் என்பதை உணர்ந்து செயல்படுவதே உண்மையான தீர்வாகும்.
Read More : 100% வரி..! ஆப்பு வைத்த அமெரிக்கா..! விழிபிதுங்கும் இந்தியா, சீனா..!



