நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வடமாநிஅல் தொழிலாளி உட்பட 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. 5 பேர் மீது 6 பேர் கும்பல் பெட்ரோல் குண்டை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர்.. இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை விசாரிக்க சென்ற காவல்துறை வாகனம் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது..
இந்த நிலையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியானது செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம். உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?
நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா? போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா? பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா? மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி.” என்று தெரிவித்துள்ளார்..



