தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தில் ஆய்வு மைய இயக்குனர் துரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை இன்று, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாக விலகியது. அதே நேரத்தில், வடகிழக்கு திசை காற்று தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் வீசத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா மற்றும் மாஹே ஆகிய பகுதிகளில் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ராயலசீமா பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழ்நாடு, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழையும், தமிழகம், புதுவை மற்றும் தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதிகாரபூர்வ அறிவிக்கிறோம். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
2026-ல் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும். வடமாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவிலும் இருக்கும். தென்மேற்கு பருவமழை இந்தாண்டு 20 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.
2012ல் தென்மேற்கு பருவமழை 23 செ.மீ குறைவாக பதிவாகியுள்ளது.அதற்கு அடுத்தபடியாக 2014ல் 20 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இயல்பை விட மழை குறைவு வெயில் அதிகம்.
கடலோர பகுதிகளில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20 செ.மீ மேல் பெய்தால் அதிகளவு மழை என்று தான் குறிப்பிடமுடியும். அடுத்த 7 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் அநேக மாவட்டங்களில் 2-3 டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. அடுத்த 3 மாதங்களில் மழையின் அளவு இயல்பை விட அதிகமிருக்கும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு அதிக மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்தாண்டு எல் நினோ தாக்கத்தினால் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுவரை எல் நினோ காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மழை அளவு அதிகமாக பதிவாகியுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் குறைவாக உருவாகி இருந்தது. எல் நினோ அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதம் வரை இருக்கும் என்று தெரிவித்தார்.



