டிடிவி தினகரனை சந்தித்தது ஏன் என்பது குறித்தும் அவருடன் பேசியது என்ன என்பது குறித்தும் அண்ணாமலை விளக்கம் அளித்தார்..
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அரசியல் தலைவர்கள் இப்போதே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது..
இந்த சூழலில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று கூறி ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது.. முதலில் தேசிய கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில் பின்னர் டிடிவி தினகரனும் வெளியேறினார். தனது முடிவை மறு பரிசீலனை செய்ய தினகரனிடம் வலுயுறுத்துவேன் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்தார்..
இந்த சூழலில் சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரனை பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.. சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் நேற்றிரவு சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என அண்ணாமலை தினகரனிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டிடிவி தினகரனுடன் பேசியது என்ன என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்தார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ டிடிவி தினகரன் ஒரு மாதம் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு சென்னை வந்த உடன் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.. அதனடிப்படையில் அவரை சந்தித்து பேசினேன்.. அவரை சந்தித்தது உண்மை தான்.. தமிழகத்தில் தற்போது அரசியல் களம் எப்படி உள்ளது என்பது பற்றி பேசினோம்.. திமுக கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பேசினோம்.. இது ஒரு வெளிப்படையான சந்திப்பு தான்..
எப்போதும் டிடிவி தினகரனும் பாஜகவும் தொடர்ந்து நட்புறவில் தான் உள்ளது.. கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என தினகரனுக்கு அழைப்பு விடுத்தேன்.. நவம்பர் மாததிற்குள் நல்ல முடிவை அறிவிப்பதாக சொல்லியிருக்கிறார்.. திமுக கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டும் தான் வீழ்த்த முடியும்.. டிடிவி தினகரன் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.. டிடிவி தினகரன் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களை மதிக்கும் நபர் நான்.. அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை.. அதனடிப்படையில் தான் இந்த சந்திப்பு இருந்தது.. அதனால் பொறுத்திருப்போம்..” என்று தெரிவித்தார்.
Read More : EPS-ஐ ஸ்கிப் செய்த செங்கோட்டையன்.. நள்ளிரவில் அவசர அவசரமாக சென்னை பயணம்..!! இதுதான் காரணமா..?



