“போதை பொருள் விற்பனையை தடுக்க ஏன் நடவடிக்கை இல்லை” ; அண்ணாமலை ஆவேசம்!

கும்பகோணத்தில் அரசுப்பேருந்து நடத்துநரை கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கிய சம்பவத்திற்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறையால் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாக ஏன் தடுக்க முடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரை பகுதியில் பேருந்துக்கு வழிவிடாமல் சாலையில் நின்றிருந்த இளைஞர்கள் மீது லேசாக உரசி, பேருந்து நிற்காமல் சென்றதால், அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை, இளைஞர்கள் ஆபாசமாக திட்டியும், சரமாரியாக தாக்கியும் உள்ளனர். போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழகத்தில், கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. சென்னையில் கஞ்சா வியாபாரிகள், காவல்துறையினரைத் தாக்கியது, கும்பகோணம் அருகே இளைஞர்கள், கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது, இன்று, தேனியில் கஞ்சா போதையில் மனைவி, மாமனாரைத் தாக்கிய நபர் என கடந்த மூன்று நாட்களில், வெளிவந்த செய்திகள், பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது. ஆனால், குற்றம் நடந்து செய்தியான பிறகே குற்றவாளிகளைக் கைது செய்ய முன்வரும் காவல்துறைக்கு, கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? ஏன் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை?. திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாகச் செயல்பட்டதைக் கண்டுகொள்ளாமல், மூன்று ஆண்டுகளாகக் கோட்டை விட்டது போல, கஞ்சா புழக்கத்தைத் தடுக்க இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது, மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Post

ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு : மு.க.ஸ்டாலின் கண்டனம்

Mon Apr 22 , 2024
ராஜஸ்தானில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பேச்சுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ”நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூறினார்கள். காங்., ஆட்சிக்கு வந்தால் நமது சொத்துகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு கொடுக்கப்படும். நகர்ப்புற நக்சல் சிந்தனை, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலிகளைக்கூட விட்டுவைக்காது” எனப் பேசியிருந்தார். […]

You May Like