தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.
இந்த கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் வரும் காலங்களில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்களை சந்தித்தார். இந்த நிகழ்வில் பேசிய அவர், “50 மாத திமுக ஆட்சியில் மயிலாடுதுறைக்கு ஒரு பெரிய திட்டமும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் இல்லை. முதல்வர் ஸ்டாலின், வீட்டு மக்களுக்கு மட்டுமே அக்கறை கொண்டவர். நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை,” என சாடினார்.
டாஸ்மாக் மூலமாக தினமும் 15 கோடி ரூபாய் வருமானம் அரசு பெற்று வருகிறது. இந்த வருமானம் எப்படி செலவிடப்படுகிறது என்பது தெரியவில்லை. ‘பத்து ரூபாய் பாலாஜி’ எனவும், உதயநிதி மற்றும் சபரீசன் 30 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென திணறுவதாகவும் நிதியமைச்சரே கூறியிருக்கிறார்.
திமுக அரசு வாரிசு அரசியலால் இயங்குகிறது. துரைமுருகன் போன்ற திமுக மூத்த தலைவர்களுக்கு கூட மரியாதை இல்லை. ஜனநாயகம் என்றே திமுகவில் காணப்படவில்லை. விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு அதிக இடங்கள் தேவை என அழுத்தம் கொடுத்து வருகின்றன. தேர்தல் நெருங்கும் வேளையில் சில கட்சிகள் கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
ஸ்டாலின் அரசு கடன் சுமையை மட்டும் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, 4.38 லட்சம் கோடி கடனுடன் தொடங்கிய அரசு, திமுக ஆட்சி முடியும் போது 5.38 லட்சம் கோடி கடனாக இருக்கலாம். விலை உயர்வு, ஊழல், பொய்யான வாக்குறுதிகள் என மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்” என கடுமையாக விமர்சித்தார்.
Read more: உயரமான பகுதியில் ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றி…!