உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு பொதுமக்கள் முன்னிலையில் வன்முறையாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுரோட்டில் கணவரின் கழுத்தைத் துப்பட்டாவால் நெரித்த மனைவியுடன் அவரது மகளும் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகரின் சந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை மீறியுள்ளது. ஆத்திரமடைந்த மனைவி, தனது மகளுடன் சேர்ந்து கணவரைத் தாக்கியதுடன், துப்பட்டாவைப் பயன்படுத்தி அவரது கழுத்தை நெரித்துக் கொல்லவும் முயன்றுள்ளார். திடீரென நடந்த இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் கணவர் போராடியுள்ளார்.
சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் கணவரை இருவர் தாக்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, கழுத்தை நெரித்ததால் அவர் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தபோதும் தாக்குதல் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில், அவ்வழியாக வந்த முதியவர் ஒருவர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாகத் தலையிட்டார். அவர் விரைந்து செயல்பட்டு, மனைவியின் பிடியிலிருந்து கணவரை மீட்டதுடன், தொடர்ந்து நடந்த தாக்குதலையும் தடுத்து நிறுத்தினார்.
இதனால் கணவரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து தவிர்க்கப்பட்டது. குடும்பப் பிரச்சினை நடுரோட்டில் வன்முறையாக மாறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நை மண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இச்சம்பவம் தொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலுக்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: TET தேர்ச்சி பெற்றவர்களே கவனம்.. சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய 5 நாட்கள் மட்டுமே!



