டெல்லியில் 55 வயது நபர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது மனைவியே கொலைக்கு திட்டம் தீட்டியதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கணவரை கொலை செய்ய தனது காதலனுக்கு ரூ.5 லட்சம் வழங்குவதாக அவர் பேரம் பேசியதும், கொலைக்குப் பிறகு வீட்டில் திருட்டு நடந்ததாக நாடகமாடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாலால் (55). ரியல் எஸ்டேட் புரோக்கராக பணியாற்றி வந்த இவர், கடந்த 10ஆம் தேதி அதிகாலை ரதியா மார்க் பகுதியில் சாலையோரத்தில் படுகாயங்களுடன் கிடந்தார். அதிகாலை 5 மணியளவில் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், முன்னாலாலை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், முன்னாலாலின் மனைவி நசியா போலீஸாரிடம் வேறொரு கதையை கூறியிருந்தார். இரவு நேரத்தில் வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்ததாகவும், அவர்களை தடுக்க முயன்றபோது கணவர் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நேரத்தில் தான் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறினார். ஆனால், சம்பவம் தொடர்பாக நசியா அளித்த தகவல்களில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரது வாக்குமூலத்தை மீண்டும் மீண்டும் சரிபார்த்தபோது, சில தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் கொலைக்கான திட்டம் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். நசியாவுக்கும் அவரது வீட்டுக்கு அருகே உள்ள கடையில் வேலை செய்து வந்த சமனுக்கும் இடையே நீண்டகாலமாக நெருக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தொடர்பு பின்னர் திருமணத்தைத் தாண்டிய உறவாக மாறியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவருடன் ஏற்பட்ட குடும்ப மற்றும் பணப் பிரச்னைகளுக்கு தீர்வாக அவரை கொலை செய்ய நசியா திட்டமிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதற்காக சமனை அணுகிய அவர், கொலையை செய்தால் ரூ.5 லட்சம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும், முன்பணமாக ரூ.20 ஆயிரத்தை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. திட்டத்தின் ஒரு பகுதியாக, முன்னாலாலை மயக்கமடையச் செய்வதற்காக சமன் தூக்க மாத்திரைகள் அல்லது மயக்க மருந்துகளை வழங்கியதாக போலீஸார் தெரிவித்தனர். அவற்றை தண்ணீரில் கலந்து நசியா தனது கணவருக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னாலால் மயக்கமடைந்த பின்னர், சமன் தனது கூட்டாளியான கிஷனுடன் வீட்டுக்குள் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கு முன்னாலாலை கயிற்றால் நெரித்ததுடன், மின்சாரம் பாய்ச்சியும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், மரக்கட்டையால் தாக்கி கொலை உறுதி செய்யப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனையில் முன்னாலாலின் உடலில் பல்வேறு காயங்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக, அவரது அந்தரங்கப் பகுதியில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதற்கான தடயங்களும் இருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை நடந்த பிறகு, சம்பவத்தை திருட்டு சம்பவமாக மாற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த ரத்தக் கறைகளை சுத்தம் செய்ததுடன், கொலை நடந்ததற்கான தடயங்களை அழிக்கவும் முயற்சி செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். முன்னாலால் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருந்தபோதிலும், குடும்பத்தில் பணம் தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாக போலீஸார் கூறினர். மேலும், கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக நசியா குற்றம்சாட்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடும்பப் பிரச்னைகளும் கொலைக்கான பின்னணியில் இருந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
முன்னாலால்-நசியா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் அவர்களது மகன் வீட்டில் இல்லாமல் வெளியே சென்றிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நசியா, சமன் மற்றும் அவருக்கு உதவியதாக கூறப்படும் கிஷன் ஆகியோரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு சம்பவமாக தொடங்கியதாக கூறப்பட்ட இந்த வழக்கு, தற்போது கணவரை கொலை செய்ய மனைவியே திட்டம் தீட்டியதாக கூறப்படும் அதிர்ச்சி வழக்காக மாறியுள்ளது.
Also Read: முதல்வர் விஜய் அலுவலக அறை மாற்றம்.. ரூ.5 கோடியில் புதிய ஏற்பாடுகள்!



