தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2025-ஆண்டு தீபாவளிப்பண்டிகை 20.10.2025 தேதியன்று கொண்டாடப்படவுள்ளது. அதன் பொருட்டு, தற்காலிக பட்டாசுக்கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008 -இன் கீழ் தற்காலிக பட்டாசுக்கடை வைக்க உரிமத்திற்கான விண்ணப்பங்களை https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் அல்லது இ-சேவைமையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தற்காலிக பட்டாசு கடைக்கான உரிமம் பெற 10.10.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 10.10.2025-ஆம் தேதிக்கு பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மற்றும் இணையவழி அல்லாமல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.
விண்ணப்பம் செய்திட கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் விண்ணப்பதாரர் புகைப்படம், முகவரிச் சான்று, புகைப்படத்துடன் கூடிய ஆதார்/பான்கார்டு/வாக்காளர் அடையாள அட்டை, பட்டா அல்லது சொத்து பத்திரம், வாடகைக்கட்டடமாக இருந்தால் நோட்டரி வழக்கறிஞரின் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், தற்காலிக உரிமக் கட்டணமாக ரூ.600/- அரசுக்கணக்கில் செலுத்தி அதற்கான அசல் சலான் (இணையவழி விண்ணப்ப கட்டணம் ரூ.500/-), தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புக்கு கட்டணம் செலுத்திய இரசீது மற்றும் கட்டடத்தின் அங்கீகரிக்கப்பட்ட நீல வரைபடம் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தின் படி தற்காலிக பட்டாசுகடை அமையவுள்ள கட்டடம், கல் அல்லது தார்சுக்கட்டடமாக தரைதளத்தில் (Ground level Only) மட்டும். ஒற்றைதளம் (Single Story Building) மட்டும் கொண்ட கட்டடமாக இருக்க வேண்டும். கடையின் இருபுறமும் வழி அமைத்திருக்க வேண்டும். கதவுகள் வெளிபுறமாக திறக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கட்டடத்தின் பரப்பு ஒன்பது ச.மீட்டருக்கு குறையாமலும், 25 ச.மீட்டருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கட்டடத்தில் வேறுபொருட்கள் எதையும் வைத்திருக்க கூடாது.
மின்சார விளக்குகள் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். அமைக்கப்பட்டுள்ள மின்இணைப்புகள் கட்டாயமாக மூடப்பட்ட்ட நிலையில் இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், அமைப்புகள் ஏதும் இருக்கக்கூடாது. செயல்திறன் உள்ள தீத்தடுப்பு சாதனங்கள் கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மிகுதியாக பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தால் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உரிமம் வேண்டப்படும் கட்டடத்திற்கு தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையிடமிருந்து தடையின்மைச்சான்று பெற்றிருக்க வேண்டும். கடை வைக்க விண்ணப்பிக்கும் போது இந்நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.