மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்படும் டிசிஎஸ் நிறுவனத்தில் மதமாற்ற முயற்சி மற்றும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை வட்டாரங்களின் தகவலின்படி, மூத்த ஊழியர்கள் மற்றும் HR உள்ளடக்கிய குழு, புதியதாக பணியில் சேரும் ஊழியர்களின் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்களை சேகரித்து, பொருளாதார மற்றும் குடும்ப பிரச்சினைகளில் சிக்கியவர்களை குறிவைத்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பயிற்சி அமர்வுகளின் போது, குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் ஊழியர்களை பின்னர் அணுகி அவர்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த செயல்முறையில் மனிதவள மேலாளர் நிடா கான் முக்கிய பங்காற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ஒருவரை தனது குடும்பத்துடன் மோதல் ஏற்படும் அளவிற்கு தூண்டி, வீட்டிலிருந்த மத சின்னங்களை அகற்ற வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆசிஃப் அன்சாரி, ஷஃபி ஷேக், ஷாருக்கான் குரேஷி, ரஸா மேமன், தௌசிஃப் அத்தார் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கை வெளிச்சத்துக்கு கொண்டுவர காவல்துறை ரகசிய நடவடிக்கை மேற்கொண்டது. பெண் காவலர்கள் துப்புரவுப் பணியாளர்களாக மாறுவேடத்தில் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தகவல்கள் சேகரித்தனர். சில ஆண் காவலர்களும் மாறுவேடத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
மேலும், குற்றச்சாட்டுக்குட்பட்டவர்கள் பயன்படுத்திய வாட்ஸ்அப் குழுவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ‘இலக்கு’ நபர்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், மத தொடர்பான கருத்துக்கள் மற்றும் நிறுவன உள்கட்டமைப்பு விவாதங்கள் இடம்பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் தனி விசாரணை நடைபெற்று வருகிறது. சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம், ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
Read more: முனிவரின் தவம் காத்த கள்ளழகர்.. இசை ஒலிக்கும் தூண்கள்.. திண்டுக்கலில் இப்படி ஒரு கோவிலா..?



