தமிழக முதல்வர் விஜய் இன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கான லோகோ மற்றும் ரோந்து வாகனங்களையும் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய் “ ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.. அதில் ஒன்று தான் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா நிகழ்ச்சி.. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஜீரோ டாலரன்ஸ் தான்.. பயமின்றி பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட நடவடிக்கை எடுக்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது..
பெண்களுக்கு தொல்லை தருபவர்களை எச்சரிக்கிறேன், பெண்களுக்கு தொல்லை கொடுத்தால் உடனடியாக கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள்.. தண்டனை, குற்றப்பத்திரிகை, எல்லாமே விரைவாக செயல்படுத்தப்படும்.. இதில் நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்படக் கூடாது..
இந்த சிங்கப்பெண் சிறப்பு படைக்காக முதல்கட்டமாக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.. இந்த திட்டத்திற்கு 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது.. இந்தியாவில் முதன்முறையாக ட்ரோன் மூலம் பேட்ரோல் உருவாக்கப்படும்.. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவலர்கள் ட்ரோன் மூலமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்..
பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்க்கும்போது மனம் வலிக்கிறது; கண் கலங்குகிறது; பெண்களுக்கு எதிரான இந்த குற்றங்களுக்கு காரணம், போதைப்பொருள் நடமாட்டம் தான்..
போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்; பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதால்தான், போதைப்பொருள் நடமாட்டம் பரவிவிட்டது. பெண்களின் பாதுகாப்பை தொந்தரவு செய்வோர் யாராக இருந்தாலும் சகித்துக்கொள்ள முடியாது.
உட்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு மட்டுமே ஒரு நாட்டுக்கு முக்கியமல்ல; பெண்கள் பாதுகாப்பும் முக்கியம்; பெண்களும் குழந்தைகளும் மரியாதையாக வாழ்கிறார்களா என்பதில் ஒரு அரசின் வெற்றி உள்ளது. பெண்களின் கனவுகளை நான் அறிவேன், நிச்சயம் நிறைவேற்றுவேன்.. நம் வீட்டு பெண்களின் கண்ணீயம் காப்பது தான் நமது அரசின் முக்கிய கடமை.. அரசின் இலக்கு சரியாக இருந்தாலே செல்லும் பாதை சரியானதாக இருக்கும்..” என்று தெரிவித்தார்..
சிங்கப்பெண் அதிரடி சிறப்புப்படை முதல்வர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இயங்குகிறது.. பெண் காவலர்களிடம் இருந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை காவலர்கள் தனித்து தெரியும் வகையில் சிறப்பு சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.. அடர் நீல நிற சட்டை, காக்கி பேண்ட், கருப்பு தொப்பி, தோள் பட்டையில் காக்கி பெல்ட், எடை குறைவான கருப்பு ஷூ என பிரத்யேக சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ள இடங்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை கண்காணிக்கும்.. பேருந்து ,ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி பெண்கள் அதிகம் கூடும் இடங்களை சிங்கப்பெண் அதிரடி படை கண்காணிக்கும்.. சென்னை உள்ளிட்ட அனைத்து காவல் மாவட்டங்கள், முக்கிய நகரங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது..



