அரக்கோணத்தில் இளம்பெண் தற்கொலைசெய்து கொண்ட நிலையில், வரதட்சணை கொடுமையால் இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தண்டலம் பாலாஜி பகுதியை சேர்ந்தவர் வினோத் (30). ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகின்றார். இவருடைய மனைவி நிவேதாவும் (26) ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் ரியா என்ற பெண் குழந்தை உள்ளது.
திருமணத்தின் போது பெண் வீட்டார் 27 சவரன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் அனைத்தையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நிவேதாவுக்கு பெற்றோர் இல்லாத நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டுக்கு கடந்த ஆண்டு சென்றுள்ளார்.
பிறகு கணவர் வீட்டு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி நிவேதாவை கடந்த மாதம் வீட்டுக்கு அழைத்து வந்தனர். சமாதானம் செய்து அழைத்து வந்த பிறகும் சண்டை தீர்ந்த பாடில்லை.. இந்த நிலையில் நேற்று வீட்டில் நிவேதாவும், அவரது கணவரும் மட்டும் இருந்த நிலையில் மீண்டும் சண்டை வெடித்துள்ளது. மற்றொரு அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்ட நிவேதா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது நிவேதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே நிவேதாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினர், அவருடைய சாவில் சந்தேகம் உள்ளது என்று நிவேதாவின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலையில் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: நீங்களும் தும்மலை அடக்க முயற்சிக்கிறீங்களா? அது எவ்வளவு ஆபத்தானதுன்னு உங்களுக்குத் தெரியுமா?