பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 154 பேர் பலியாயினர்.
பாகிஸ்தானின் மலை பாங்கான கைபர் பக்துன்வா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையினால் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வட மேற்கு பஜாவுர் மாவட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். 17 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை.
மேலும் பனேர் மாவட்டத்தில் 75 பேர் உயிரிழந்தனர். லோயர் டிர் மாவட்டத்தில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயமடைந்தனர். மீட்பு படையினர் 7 பேரை மீட்டுள்ளனர். ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் திடீர் வௌள பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். வட மேற்கில் உள்ள பட்டாகிராம் மாவட்டத்தில் 18 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மழை தொடர்பான சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் பெய்த பலத்த மழைக்கு மொத்தம் 154 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர். மான்ஷெரா மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான சைரன் பள்ளத்தாக்கில் 600 சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.