கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்காக உலகம் முழுவதும் பலர் வித்தியாசமான மற்றும் சவாலான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது பிரேசில் நாட்டைச் சேர்ந்த மருத்துவத் தம்பதியினர் செய்த ஒரு வினோதமான முயற்சி கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டதுடன், சமூக வலைதளங்களிலும் வேகமாக வைரலாகி வருகிறது.
வித்தியாசமான சாதனைகள் மூலம் உலகின் கவனத்தை ஈர்க்கும் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில், தற்போது பிரேசிலைச் சேர்ந்த மருத்துவத் தம்பதியினர் புதிய சாதனையுடன் இடம்பிடித்துள்ளனர். பிரேசிலின் சாவோ பாலோவைச் சேர்ந்த ரெனாடோ மற்றும் நையாரா ஆகியோர் மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் தம்பதியினர். இவர்கள், வெறும் 30 வினாடிகளில் 195 முறை முத்தமிட்டு புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளனர்.
ரெனாடோ, கவனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டுக் குறைபாடு (ADHD) இருந்தபோதிலும், மன உறுதியும் தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சியும் இருந்தால் எந்த இலக்கையும் அடைய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
தாங்கள் இருவரும் உலகின் மிகச்சிறந்த தம்பதி என்பதை உலகிற்கு காட்ட நினைத்த இவர்களின் இந்த முயற்சி, தற்போது அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளனர். தற்போது இவர்களின் சாதனை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Also Read: பெற்றோர்களே கவனம்!! வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..



