அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1996 காலியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) ஆகிய பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மொத்தம் 1,996 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை தொடர்பான அனைத்து விவரங்களும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, உரிய விவரங்களை சரி பார்த்து அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு தொடர்பான கோரிக்கை மனுக்களை என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டும் அனுப்ப வேண்டும். இதர வழியில் அனுப்பப்படும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.