திமுக கூட்டணியில் ‘புதிய திராவிட கழகம்’ கட்சி இணைந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைகள் பிப்ரவரி, மார்ச் வாக்கில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கூடுதலாக சில கட்சிகள் கூட்டணிக்கு வர இருப்பதாக தகவல். இவர்களை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பல கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருவதும், போவதுமாக இருந்து வருகின்றன. ஆனால், திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அமைந்த கூட்டணி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக வலுவாகவே இருந்து வருகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தாவாக மற்றும் சில அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தது. 2021 சட்டமன்றத் தேர்தல், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல்களை கடந்து 2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்தக் கூட்டணியுடன் தொடர்கிறது திமுக.
இதற்கிடையே கூட்டணியில சில சிக்கல்கள் இருந்தாலும்கூட, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலைப் போலவே காங்கிரஸிற்கும் 25 தொகுதிகள், பிற கட்சிகளுக்கு சுமார் 40 தொகுதிகள் வரை ஒதுக்கிவிட்டு 170 க்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுகவை போட்டியிட திட்டமிட்டுள்ளது. சிறிய கட்சிகளுக்கும், திமுக சின்னமே ஒதுக்கி தரப்படும் என தகவல். இந்நிலையில் இந்த கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணிக்கு மேலும் சில சிறிய கட்சிகள் வர இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் ‘புதிய திராவிட கழகம்’ கட்சி இணைந்துள்ளது. இன்று மொடக்குறிச்சியில் அக்கட்சி சார்பில் நடைபெறவிருக்கும் ‘வெல்லட்டும் சமூக நீதி’ மாநாட்டில் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டருக்கு கொங்கு மண்டலத்தில் ஒரு சீட் உறுதி என சொல்லப்படுகிறது.



