விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து ஆண்டு கணக்கில் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சிக்கு வந்த போது தமிழகத்தில் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 4.50 லட்சம் விவசாயிகள் காத்திருந்ததனர். விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்போவதாக அறிவித்த திமுக அரசு அதை முறையாக செய்யவில்லை. நடப்பாண்டில் ஒருவருக்கு கூட மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதற்கான காரணமும் திமுக அரசால் தெரிவிக்கப்படவில்லை.
மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகளில் 2003-ம் ஆண்டுக்கு முன்பு விண்ணப்பம் செய்த விவசாயிகளுக்கு மட்டும் தான் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் 22 ஆண்டுகளாக விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என்பது தான் உண்மை. தமிழக அரசு நினைத்திருந்தால், கடந்த நான்கரை ஆண்டுகளில் குறைந்தது 10 லட்சம் விவசாயிகளுக்காவது மின்சார இணைப்பு வழங்கியிருக்க முடியும். ஆனால், அதில் 20 சதவீதத்துக்கும் குறைவாக 1.70 லட்சம் பேருக்கு மட்டும் தான் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
விவசாயிகளின் நலன்கள் தொடர்பாக திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் 5 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. உணவு படைக்கும் கடவுள்களான விவசாயிகள் மீது திமுக அரசு காட்டும் அக்கறை இவ்வளவு தான். கடந்த நான்கரை ஆண்டுகளாக தங்களுக்கு துரோகம் செய்து வரும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் உழவர்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.