புற்றுநோய் என்பது உலகம் முழுவதும் பலரது வாழ்க்கையை பாதிக்கும் ஒரு தீவிரமான நோயாகும். ஆனால், இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சிகிச்சை மூலம் குணமடையும் வாய்ப்புகள் அதிகம். பலர் உடலில் தோன்றும் சிறிய மாற்றங்களை கவனிக்காமல் இருப்பதாலும், மருத்துவரை அணுகுவதில் தாமதம் செய்வதாலும் நோய் தீவிரமடைந்து சிகிச்சை கடினமாகும் நிலை ஏற்படுகிறது. அதனால் உடல் தரும் சில முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம்.
எந்தவிதமான உணவு மாற்றமும், உடற்பயிற்சி மாற்றமும் இல்லாமல் குறுகிய காலத்தில் திடீரென அதிகமான உடல் எடை குறைவது கவனிக்க வேண்டிய அறிகுறியாகும். உடலில், தோலில் அல்லது வாய்ப்பகுதியில் ஏற்படும் புண்கள் நீண்ட நாட்களாகியும் குணமாகாமல் இருந்தால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. காரணமே இல்லாமல் இருமும்போது ரத்தம் வருவது, சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போது ரத்தப்போக்கு ஏற்படுவது, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தைத் தவிர்த்து ரத்தப்போக்கு இருப்பது போன்றவை மருத்துவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய அறிகுறிகள்.
போதுமான தூக்கம் மற்றும் ஓய்வு எடுத்தாலும் தொடர்ந்து அதிகமான சோர்வு, உடல் பலவீனம் போன்றவை நீடித்தால் அதற்கான காரணத்தை கண்டறிவது முக்கியம். மார்பகம், கழுத்து, அக்குள் அல்லது உடலின் வேறு பகுதிகளில் வலி இல்லாத கட்டிகள் அல்லது வீக்கங்கள் தோன்றினாலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த அறிகுறிகள் அனைத்தும் புற்றுநோயை உறுதி செய்யும் அறிகுறிகள் என்று அர்த்தமில்லை. ஆனால், உடலில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களை புறக்கணிக்காமல், சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் புற்றுநோயை எதிர்த்து வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
Also Read: ஃபிரிட்ஜை இப்படி வச்சிருக்கீங்களா? கரண்ட் பில் எகிறிடும்… இப்பவே மாத்துங்க!



