தேனியில் காணாமல் போன 38 வயது பெண், புரோட்டா மாஸ்டர் ஒருவரின் வீட்டுக்குள் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையைத் தொடங்கிய போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு, அவருடன் தொடர்பில் இருந்த நபரை கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அம்சவள்ளி (38), கடந்த 9-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த அவரது மகள் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்சவள்ளியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
விசாரணையின்போது அம்சவள்ளியின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், தேனியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் அப்துல் ரகுமான் (36) என்பவருடன் அவர் கடைசியாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து அப்துல் ரகுமானின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையில், அப்துல் ரகுமான் வசித்து வந்த வீட்டில் இருந்து திடீரென கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக அங்கு சென்று, பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
வீட்டுக்குள் சோதனை நடத்தியபோது, சாக்கு மூட்டையில் பெண்ணின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தலையில் பலத்த காயங்களுடன் கிடந்த அந்த சடலம் அம்சவள்ளியுடையது என்பதை போலீசார் உறுதி செய்தனர். உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், அப்துல் ரகுமானை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், செல்போன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தைத் தொடர்ந்து அம்சவள்ளிக்கும் அப்துல் ரகுமானுக்கும் இடையே பணம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது தெரியவந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அப்துல் ரகுமான் கல்லால் தாக்கியதில் அம்சவள்ளி உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்பிறகு சடலத்தை வீட்டில் இருந்து வெளியே கொண்டு செல்ல முடியாமல், சாக்கு மூட்டையில் கட்டி வீட்டுக்குள்ளேயே வைத்துள்ளார். சுமார் 3 நாட்களாக சடலத்துடன் அதே வீட்டில் இருந்த நிலையில், துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் தொடர்பான தகராறு பெண்ணின் கொலையில் முடிந்த சம்பவம் தேனி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: இமயமலையில் காத்திருக்கும் பேராபத்து!!ஒரு பேரிடர் அடுத்தடுத்து பல பேரழிவுகளை உருவாக்கும் அபாயம்!



