விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமாவதி மாயமான வழக்கில், அவர் சென்ற இடம் குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. சிறுமி காணாமல் போன அன்று அதிகாலை குழந்தையின் அழுகுரல் கேட்டதாக அண்டை வீட்டுப் பெண் அளித்த தகவலும், கண்காணிப்பு கேமராக்களில் சிறுமி கிராமத்தை விட்டு வெளியேறிய காட்சி கிடைக்காததும் விசாரணையில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் மகள் ஹேமாவதி. கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு சிறுமியைக் காணவில்லை. அப்போது வீட்டின் வாசல் கதவு திறந்திருந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். சிறுமியைத் தேடும் பணி தொடங்கி 12 நாட்களைக் கடந்துள்ள நிலையிலும், அவரைப் பற்றிய உறுதியான தகவல் கிடைக்காததால் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.
சிறுமியின் வீட்டுக்கு எதிரே வசிக்கும் மஞ்சுளா என்ற பெண் அளித்த தகவல் தற்போது விசாரணையில் கவனம் பெற்றுள்ளது. சிறுமி மாயமான அன்று அதிகாலை, வெளியே இருந்து குழந்தை ஒன்று “அம்மா… அம்மா…” என இருமுறை அழுத சத்தம் கேட்டதாகவும், உடனே வெளியே வந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லை என்றும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அந்தக் குரல் ஹேமாவதியுடையதா, அந்த நேரத்தில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஆலம்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சிறுமி தனியாக நடந்து கிராமத்தை விட்டு வெளியேறிய காட்சி இதுவரை கிடைக்கவில்லை. இதனால், அவர் வேறு வழியாக அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது அருகிலுள்ள பகுதியில் இருக்கிறாரா என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. இருப்பினும், சிறுமி கடத்தப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் இதுவரை வெளியாகவில்லை.
தொழில்நுட்பத் தடயங்கள் மூலமாகவும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. சிறுமி காணாமல் போன நேரத்தில் அப்பகுதி செல்போன் கோபுரங்களில் பதிவான 600-க்கும் மேற்பட்ட அழைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, சந்தேகத்துக்குரிய தொடர்புகளைச் சரிபார்த்து வருகின்றனர். இதன் அடிப்படையில் உள்ளூர் நபர்கள் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரத்தில், சிறுமியைத் தேடும் பணி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடுப்பட்டு, ஆர்க்காம்பூண்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், புதர்கள் மற்றும் ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தேவையான இடங்களில் கிணற்று நீரை வெளியேற்றியும் தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.
அதிகாலையில் கேட்டதாகக் கூறப்படும் அழுகுரல், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் அழைப்புத் தகவல்கள் எனப் பல்வேறு தடயங்களை ஒன்றிணைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹேமாவதி மாயமானதன் பின்னணி என்ன, அவர் எங்கு இருக்கிறார் என்பதற்கான விடை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே நீடிக்கிறது.
Also Read: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. கொலை செய்ய மனைவி போட்ட திட்டம்!



