உத்தரப் பிரதேசத்தில் காவலர் ஒருவர் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், தனிப்பட்ட படங்களை வைத்து மிரட்டுவதாகவும் 10-ஆம் வகுப்பு மாணவி குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு நேர்ந்த பாதிப்புகளை விவரித்து அந்த மாணவி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள காமர் காவல் நிலையத்தில் பணியாற்றும் மோகித் யாதவ் என்பவர் மீது மாணவி புகார் அளித்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்து தன்னை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு ஆபாசப் படங்களை எடுத்ததுடன், பின்னர் அவற்றைக் காட்டி மிரட்டி துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினையால் தனது வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள மாணவி, குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்கவில்லை என வீடியோவில் பேசியுள்ளார். மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வருவதாக அவர் தெரிவித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் குற்றச்சாட்டுகள் குறித்து ஊரக காவல் கண்காணிப்பாளர் அதுல் குமார் சோங்கார் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, குற்றச்சாட்டுக்கு உள்ளான காவலர் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், அந்தத் தகவல் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை.
புகாரின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. விசாரணையின் முடிவிலேயே குற்றச்சாட்டுகள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.
Also Read: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. கொலை செய்ய மனைவி போட்ட திட்டம்!



