தமிழகத்தில் மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகமெங்கும் நடந்து வருகிறது. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள், டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழக மின்சாரத் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் தவிர ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது, ஆதார் எண்ணை எளிதாக இணைக்க இந்த https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய லிங்கையம் மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை 71.31 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 3.35 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 1.84 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் டிசம்பர் 7ஆம் தேதி வரை மொத்தம் 71.31 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன” என் பதிவிட்டுள்ளார்.