வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வினை அறிவித்துள்ளது தமிழக அரசு.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறியதாவது; கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள், 01.01.2020-ம் தேதியிலிருந்து சம்பள உயர்வு குறித்த கோரிக்கையினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு, அவர்களுக்கான 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் ஊதிய உயர்வினை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 01.01.2020 முதல் ஊதிய உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.
சங்கங்களின் வகைப்பாட்டிற்கேற்ப 23% வரை ஊதியம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வினால் பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.2,259 முதல் அதிகபட்சமாக ரூ.14,815 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். இவற்றின் மூலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் 1,675 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.