சத்தீஸ்கர் மாநிலத்தில் பெற்ற தாயையும், உடன் பிறந்த சகோதரியையும் கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட் லிமிடெட் கம்பெனியின் பணியாளர்களுக்கான குடியிருப்பில் 19 வயது இளைஞன் தனது தாயையும் மூத்த சகோதரியையும் நேற்று கொலை செய்ததாக காவல்துறையினர், தெரிவித்தனர்.
குஸ்முண்டா, ஆதர்ஷ் நகர் காலனியில் வசிக்கும் அமன் தாஸ், வீட்டின் குளியலறையில் தனது தாய் லக்ஷ்மி(44), மற்றும் தனது சகோதரி அஞ்சல் (21), ஆகியோரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். குளியலறையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த தாய் மற்றும் அவரது மகள் இருவரையும் கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், தடயவியல் குழு மற்றும் மோப்பநாய் நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காவல்துறையினரின் தீவிர விசாரணையில், அமன் தாஸ், தனது தாய் மற்றும் சகோதரியை சமையலறையில் இருந்த கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார். அமன் தாஸ் குடிபோதையில் வீட்டிற்கு வந்ததால் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றிய நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து கத்தி ஒன்றை மீட்டதுடன், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.