குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா, போதை மாத்திரைகள் போன்ற போதை பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. இதை தடுக்க காவல்துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ரயில்கள் மற்றும் கூரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா கடத்தப்பட்டு குமரி மாவட்டத்தில் விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நாகர்கோவிலில் இருக்கும் கூரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா கடத்தப்பட்டது தொடர்பாக சில இளைஞர்கள் வடசேரி காவல்துறையினர் கைது செய்தனர். இதை தொடர்ந்து இன்று அதிகாலையில் மும்பையில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக நாகர்கோவில் ரெயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதைதொடர்ந்து கோட்டார் ரயில் நிலையத்தை வந்தடைந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனைத்து பெட்டிகளையும் காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் இருக்கும் இருக்கையின் கீழ் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. சந்தேகப்பட்டு அந்த பையை திறந்து பார்த்த போது, அதில் மூன்று பொட்டலங்களாக மொத்தம் 6 கிலோ கஞ்சா இருந்தது. இதைத் தொடர்ந்து கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.