திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் ஆறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சென்னை வியாசர்பாடியில் இருந்து அருப்புக்கோட்டையில் நடைபெற இருந்த நிச்சயதார்த்த நிகழ்விற்காக பயணிகள் வேனில் டிரைவர் உட்பட 18 பேர் சென்று கொண்டிருந்தனர். வேனை வியாசர்பாடி சார்ந்த 32 வயதான கார்த்திக் என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தபோது டிரைவர் கார்த்திக்கிற்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் வேன் சாலையில் கவிழ்ந்துள்ளது. அப்போது வேனின் கதவு திறந்ததால் வெளியில் விழுந்த டிரைவர் மீது வேன் கவிழ்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த ஆறு பேரையும் இருங்கலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருகிறது .