பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் மறைவையொட்டி மத்திய அரசு 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க உள்ளது.
5 முறை பஞ்சாப் முதல்வராகவும், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 95 வயதான அவர் மூச்சுக்குழாய் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பாதலுக்கு அவரது மகனும் சிரோமணி அகாலி தள தலைவருமான சுக்பீர் சிங் பாதல் மற்றும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் மகள் பர்னீத் கவுர் உள்ளனர்.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கடந்த வாரம் மொஹாலியின் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஃபோர்டிஸ் மருத்துவமனையின் அறிக்கை ஒன்றில், பிரகாஷ் சிங் பாதல் மூச்சுக்குழாய் ஆஸ்துமாவின் தீவிர அதிகரிப்புடன் ஏப்ரல் 16 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 18 ஆம் தேதி அவரது சுவாச நிலை மோசமடைந்ததால் மருத்துவ ஐசியூவிற்கு மாற்றப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு 2 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க உள்ளது.