பக்ரீத் பண்டிகைக்கு திருச்சியில் மாநகராட்சி அங்கீகாரம் இல்லாத இடங்களில் மாடுகளை வெட்டுவதைத் தடுக்கக் கோரிய மனு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஒரு பொதுநல மனுவில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளை உறுதி செய்வதற்காக, மாநில அரசு/கார்ப்பரேஷனால் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, வேறு எந்த இடங்களிலும் கால்நடைகளை வெட்டுவதைத் தடை செய்யுமாறு எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார்.
அனைத்து அரசியலமைப்பு விதிகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும், கடந்த பல ஆண்டுகளாக பசுக்கள், எருமைகள், காளைகள், ஆடுகள் போன்றவை சட்டவிரோதமாகவும் இரக்கமின்றியும் ஆண்டுதோறும் பகல் நேரத்தில் படுகொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் இதுபோன்ற சட்டவிரோத படுகொலைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் கூறினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் எல் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுபோன்ற மனுவை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவது குறித்து கேள்வி எழுப்பி, உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை நிராகரித்தது. திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட எஸ்.பி. தரப்பிலும் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு, இதன் மீதான விசாரணையை ஜூலை மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.