இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாளை மூவர்ணக்கொடியை ஏற்றிவைக்க உள்ள நிலையில், 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு தேசிய தலைநகர் டெல்லி தயாராகி வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன் தனது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்றினார், மேலும் இந்தியர்கள் அனைவரையும் தங்களது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படங்களில் தேசிய கொடியை வைக்குமாறு வலியுறுத்தினார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தின் முகப்புபடத்தை மாற்றி தேசிய கொடி இருக்கும் படத்தை வைத்துள்ளார். அந்த முகப்பு படத்தில் தேசிய கொடி மட்டும் இல்லாமல் அதற்கு மேல் இந்தியா(INDIA) என்ற வார்த்தையும், தேசிய கொடிக்கு கீழ் “ஒன்றுபட்டு நிற்கிறோம்”(UNITED WE STAND) என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.