பனி பிரதேசமான லடாக்கில் மிக உயரமான மலை குன்றுகள், ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளிட்டவை அதிகமாக காணப்படுகிறது. இந்திய எல்லையில் இருக்கக்கூடிய இந்த லடாக் பகுதியில் பல்வேறு இந்திய ராணுவ வீரர்கள் பணியில் இருக்கிறார்கள். அங்கே அமைக்கப்பட்டு இருக்கின்ற முகாம்களில், தங்கி இருக்கும் ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியிடத்திற்கு வாகனங்களின் மூலமாக, இடம்பெயர்ந்து வருகிறார்கள். இப்படி லடாக்கின் லே மாவட்டத்தில் பணியில் இருந்த வீரர்களை ஏற்றிக்கொண்டு, நேற்று மூன்று ராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர்.
இந்த ராணுவ வாகன அணிவகுப்பு, தெற்கு லடாக்கின் நியோமா அருகே, இருக்கின்ற கெரே பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வாகனம் மட்டும், திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள ஆழமான பள்ளத்தாக்கில் தலை குப்புற விழுந்தது. இந்த கொடூர விபத்தில், இந்த வாகனத்தில் பயணித்த பத்து ராணுவ வீரர்களும் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.
இந்த கோர விபத்து தொடர்பான தகவல் அறிந்தவுடன், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட நபர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டனர். மேலும், ராணுவ உயர் அதிகாரிகள் காயமடைந்த வீரர்களை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயமடைந்த 10 வீரர்களில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தான், மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த வீரர்களின் விவரம் இதுவரையில் தெரியவில்லை. அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வாகன விபத்தில், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது, லடாக்கில் நடைபெற்ற சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் பலியானது வருத்தம் அளிக்கும் விஷயமாக இருக்கிறது. விபத்தில் காயமடைந்த வீரர் மிக விரைவில் குணமடைய, இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும், இராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகத்திற்கு, தேசம் கடமைப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.