தனியாக வசிப்போர் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்காக விரைவாக தயாரிக்கக்கூடிய சிற்றுண்டியாக கருதப்படும் நூடுல்ஸ், தற்போது விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோவில், ராமன் நூடுல்ஸ் பேக்கெட்டின் பின்புறம் “புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க பாதிப்பு ஏற்படலாம்” என்ற எச்சரிக்கை வாசகம் காணப்படுவதால், நூடுல்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
‘omggotworms’ என்ற பயனரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ராமன் நூடுல்ஸ் பேக்கெட்டின் பின்புறத்தில் சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ள எச்சரிக்கையை அவர் காட்டுகிறார். இந்த வீடியோவுக்குப் பலரும் அதிர்ச்சியுடன் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு பயனர் “நாம் சாப்பிடும் அனைத்தும் ஓவரா சாப்பிட்டா தீங்குதான். ஆனா இதுல இப்படி எழுதி இருக்குன்னு யாருமே கவனிக்கல” என கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர் “பேக்கேஜிங் நச்சுத்தன்மை வாய்ந்தது, அதனால்தான் இந்த எச்சரிக்கை எழுத வேண்டியது கட்டாயம்” என விளக்கியுள்ளார்.
Proposition 65 எனப்படும் அமெரிக்காவின் காலிஃபோர்னியா மாநில சட்டத்தின் படி, புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் இருப்பின், உணவுப்பொருட்கள் உள்ளிட்ட தயாரிப்புகளில் அவசியமாக எச்சரிக்கை தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில்தான் இந்த எச்சரிக்கை லேபிள் இடம்பெற்றிருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பல சமூக ஊடக பயனர்கள் இது விழிப்புணர்வு தரும் செய்தி எனக் கூற, மற்றவர்கள் “ஏன் இந்த எச்சரிக்கை இவ்வளவு சிறிய எழுத்தில் எழுதப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்புகின்றனர். இதன் பின்னணியில், வாசகர்கள் பேக்கேஜிங் விவரங்களை கவனமாகப் படிக்க வேண்டும் என்றும், உணவுப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பட்ஜெட் உணவாக பரவலான மக்களால் விரும்பப்படும் ராமன் நூடுல்ஸ், தற்போது புற்றுநோய் மற்றும் இனப்பெருக்கத் தீங்கு தொடர்பான எச்சரிக்கையால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது உணவுப் பாதுகாப்பு மீதான கவனத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.