தற்காலத்து இளைஞர்கள், தன்னை காதலிக்கும் பெண்கள், ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவர்களை விட்டு விலக முயற்சி செய்தால், அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல், அவர்களை கொலை செய்யும் அளவிற்கு கொடூரமாக யோசிக்கிறார்கள்.
இதை எப்படி நாம் காதல் என்று சொல்ல முடியும்? காதல் என்றாலே, புரிந்து கொள்வதும், விட்டுக் கொடுத்து செல்வதும் தான். அதுவே இன்றைய இளைய தலைமுறையினர் இடையே காணப்படவில்லை, அப்படி என்றால், காதல் எங்கே இருக்கிறது? என்று தான் யோசிக்க தோன்றுகிறது.
அப்படி ஒரு சம்பவம் தான் கேரள மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. அதாவது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பசில் என்ற இளைஞருக்கும், அல்கா அன்னா பினு என்ற இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும், வெவ்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்தபோதிலும், பொது இடங்களில், இவர்கள் சந்தித்து பேசிக் கொண்டதன் மூலமாக, இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது.
இதில், அந்த இளைஞர் அந்த பெண்ணை உயிருக்கு, உயிராக காதலித்து வந்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், அந்த பெண் இல்லாமல் தனக்கு வாழ்க்கையே இல்லை என்ற அளவிற்கு அந்த இளம் பெண்ணை அந்த இளைஞர் காதலித்துள்ளார்.
இந்த நிலையில் தான், திடீர் என்று அந்த இளம் பெண் அந்த இளைஞரோடு பழகுவதையும், பேசுவதையும் தவிர்த்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த இளைஞர், பலமுறை அந்த பெண்ணுக்கு தொலைபேசியின் மூலமாக அழைப்புவிடுத்தார். ஆனால், இவருடைய அழைப்பை எடுக்க அவர் மறுத்து விட்டார்.
இதன் காரணமாக, சென்ற ஐந்தாம் தேதி அந்த இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்று, தன்னுடன் ஏன் பேசுவதில்லை என்று தெரிவித்து, அந்த இளைஞர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, அந்த இளம் பெண் பினுவை, சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், பினு, சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்து, விழுந்துள்ளார்.
அதன் பிறகு பாசில் அங்கிருந்து தப்பிச் சென்றார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பினுவை அருகில் இருந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இதற்கு நடுவே இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை மேற்கொண்டு விட்டு, அதன் பிறகு அந்த இளம் பெண்ணை வெட்டிய அவருடைய காதலனை தேடி, அந்த இளைஞரின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கே காவல் துறையினருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது, அங்கு சென்று பார்த்தபோது அந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தான், இளைஞர் வெட்டியதால், மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் பினு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.