தூய்மை பணியாளர்களின் வாக்குகளை பெறுவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். தற்போது அவர்களை சமாதானப்படுத்த அறிவிப்புகளை வெளியிடுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
ஆம்பூரில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்; தூய்மை பணியாளர்கள் சென்னையில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதே தி.மு.க தலைவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது, அவர்களை நேரடியாக சந்தித்து தேநீர் குடித்து பேசினார். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என்று வாக்குறுதி கொடுத்தார். அதை நம்பி, தூய்மை பணியாளர்கள் வாக்களித்ததால் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். 4 ஆண்டுகாலம் மனு கொடுத்து, எந்த பிரதிபலனும் இல்லாத காரணத்தினால் அவர்கள் போராட்டத்தில் இறங்கி 10 நாள்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை இன்றைக்கு கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது, ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்’ என்று தூய்மை பணியாளர்கள் கேட்கின்றார்கள். நியாயமான கேள்வி. ஓட்டுகளை பெறுவதற்காக அன்றைய தினம் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துவிட்டார். இன்றைக்கு நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், அவர்களைச் சமாதானம் செய்வதற்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். அவர்கள் வைக்கின்ற கோரிக்கை வேறு; இவர் கொடுத்த அறிவிப்பு வேறு. இன்றைக்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இரவோடு இரவாக காவல்துறை நடத்திய அப்புறப்படுத்துதல்’ முற்றிலும் சட்டத்துக்கு புறம்பான மனித உரிமை மீறல். அதைக் கேள்வி கேட்க சென்றால், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைந்தது, நாகரிக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கை. அத்துமீறிய காவல்துறை மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும்.
உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலவீனம் வேறெதுவுமில்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர் சண்முகமும் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இப்போது தான் கூட்டணி கட்சியினருக்கு ரோஷம் வந்திருக்கிறது. மக்களின் போராட்டம் வலுவடைந்த காரணத்தினால், வேறு வழியில்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டிருக்கிறது.