ஒரே நாளில், முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு..? என பாஜக மாநில தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. சூரியன் திரைப்படத்தில், அண்ணன் கவுண்டமணி அவர்களின், “போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு” என்ற நகைச்சுவைக் காட்சி, மிகவும் புகழ்பெற்றது. முதலமைச்சரின் நகைச்சுவை நாடகங்கள், அதற்குச் சிறிதும் குறைந்ததல்ல.
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தனது வீண் விளம்பரங்களை நிறுத்தி விட்டு, கொலோன் பல்கலைக்கழகத்தில், மீண்டும் தமிழ்த் துறையைக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களோடு ரூ. 3200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டுள்ளார் என்று வெளியாகியுள்ள செய்தி பெருத்த ஏமாற்றத்தையும் வலுவான சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களும், தமிழகத்தில் ஏற்கனவே பல வருடங்களாக இயங்கி வரும் நிலையில், மாநில முதல்வரே இங்கிருக்கும் பணிகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று ஒரு படாடோப நாடகம் நடத்தவேண்டிய தேவை என்ன? ஒரே நாளில், முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு..?
அதிலும், தமிழகம் போன்ற ஒரு அதிகப்படியான GDP கொண்ட மாநிலத்திற்கு, ரூ. 3200 கோடி முதலீடெல்லாம் யானை பசிக்கு சோளப்பொரியே.. கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை வெளிநாட்டிற்கு பயணம் செய்து, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள் ரூ. 15 லட்சம் கோடி முதலீட்டை தனது மாநிலத்திற்கு கொண்டு வந்தார். அதே போல, தான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாமலேயே, அமைச்சர்களை மட்டும் அனுப்பி, சுமார் ரூ. 7 லட்சம் கோடி முதலீடுகளை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் ஈர்த்தார்.
நமது தமிழக முதல்வரோ ஆறு முறை உலகத்தை சுற்றி வந்து, சொற்பத் தொகையான ரூ. 18,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை மட்டுமே ஈர்த்துள்ளார். அவற்றிலும் இன்றுவரை 95% ஒப்பந்தங்கள் வெறும் காகித அளவிலேயே நின்றுவிட்டன. ஆக, இது முதலீடு எனும் பெயரில், மக்கள் பணத்தில் திமுக நடத்தும் மோசடி விளையாட்டல்லவா..? இப்பொழுதாவது வாயைத் திறக்குமா விளம்பர மாடல் அரசு..? என கேள்வி எழுப்பி உள்ளார்.