கோயம்புத்தூர் சித்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் திருமணமாகி தனது மனைவி மற்றும் பிள்ளைகள்உடன் வசித்து வந்தார். பெட்ரோல் பங்கில் கணக்காளராக பணிபுரிந்து வந்த சந்தோஷ் திருமணம் ஆவதற்கு முன்பே தேவி என்ற பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஜாதகம் பொருத்தம் இல்லாததால் சந்தோஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணும் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சந்தோஷ் தேவி இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்தனர். இதனை அறிந்த ரவிச்சந்திரன் சந்தோஷை சந்தித்து தனது மனைவியுடன் பேசுவதை நிறுத்துமாறு எச்சரித்துள்ளார். இருப்பினும் இருவரும் பழகி வந்ததால் கோபத்தில் ரவிச்சந்திரன் தனது உறவினரான நவீன் என்பவர் உடன் இணைந்து சந்தோஷ் வேலை பார்க்கும் பெட்ரோல் பங்கிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.
வாக்குவாதம் முற்றவே ரவிச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரவிசந்திரனை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
தகவலின்படி, ரவிசந்திரனின் மனைவி தேவி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். அவரை சந்தோஷ் கூட்டி சென்ற நிலையில் நான்கு நாட்களுக்கு பிறகு திரும்ப கொண்டு வந்து விட்டுள்ளார். இந்த விஷயம் ரவிசந்திரனுக்கு தெரியவரவே இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவி கோபித்து அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் சந்தோஷை கொலை செய்ததாக ரவிசந்திரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.